Wednesday, October 29, 2008

461. 'இட்லிவடை' பிடிக்காத தமிழர்கள் உண்டா ?

வலையுலக "வெட்டி ஒட்டி"யும், பாடிகார்ட் முனீஸ்வரனின் நெருங்கிய நண்பரும், மஞ்சக்கலர் 'பஞ்ச்' கருத்துகளுக்கு பிரசித்தி பெற்றவரும், ஆட்டோ வுக்கு பயந்து அனானிமஸாக வனவாசத்தில் இருப்பவரும் ஆன உலகபுகழ் "இட்லிவடை", அவரது வலைப்பதிவின் 5 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பதிவொன்று எழுதித் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்.   நான் எழுதித் தந்ததை அவரது வலைப்பதிவில் இன்று பதிப்பித்துள்ளார்.  ஒரு ரெஃபரென்ஸுக்கு வேண்டி, அந்த மேட்டரை எனது இங்கே (எனது வலைப்பதிவில்) பதிவாக இடுகிறேன்.
*************************************************

எனக்கு ரத்னா கேப் இட்லிவடையையும் பிடிக்கும், தமிழ் வலையுலக இட்லிவடையையும் பிடிக்கும்:) இன்று (27-10-2008), அதாவது 'தீபாவளி' அன்று, ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இட்லிவடையாருக்கு முதலில் "பாரா"ட்டுகளும், வாழ்த்துகளும்...  இந்த 5 வருடங்களாக, கிருஷ்ண பரமாத்மா மகாபாரதத்தில் அடித்த லூட்டிக்கு இணையான ஒன்றை இவர் தமிழ் வலைப்பதிவுலகில் அடித்து வருகிறார் ;-)

முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.  வலைப்பதிவு பிரபலங்கள் கூட "என்னை இட்லிவடை என்று நினைக்கிறார்கள்" என்ற விஷயத்தை உள்ளுக்குள் சற்று பெருமையாக உணரும் / அதை வெளிப்படுத்தவும் செய்யும் உளவியலிலும், இ.வ-வின் அயராத உழைப்பிலும், தொழில்நுட்பத் திறமையிலும் தான் அவரது வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது :) அவரது வலைப்பதிவின் side bar சமாசாரங்களையும், அடிக்கடி மாறும் கொண்டையையும் (அதாங்க, அவரது கிராபிக் Blog Header!) பார்க்கும்போது, அவர் மென்பொருள் வல்லுனர் என்று சொல்ல முடியும்.  இ.வ வலைப்பதிவின் பிளாக் கவுண்டர், 12 லட்சத்து 38 ஆயிரச் சொச்ச எண்ணிக்கையை காட்டுகிறது.  தமிழில் எழுதப்படும் ஒரு வலைப்பதிவுக்கு, இத்தகைய பரந்த வாசகர் வட்டத்தை இ.வ தக்க வைத்திருப்பது, மிக நிச்சயமாக ஒரு சாதனையே!

இட்லிவடையை நான் வாசிக்க ஆரம்பித்தது, நான் வலைப்பதிவு தொடங்கிய சமயத்திலிருந்து, அதாவது ஜூலை 2004-லிலிருந்து.  "பத்ரிக்கு Temporary ரஜினி ரசிகனின் கடிதம்" என்று ஆகஸ்ட் 2004-இல் ஒரு பதிவு போட்டு கொஞ்சம் சர்ச்சையாகியவுடன், அருண் வைத்தியநாதன் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவை இ.வ பெருந்தன்மையாக நீக்கி விட்டார். அவர் மேல் சற்று மதிப்பும் வந்தது, தொடர்ந்து இந்த 5 ஆண்டுகளில் (தன் பதிவுகளுக்கு காட்டமான மறுமொழிகள் வந்தாலும்) அமைதியாகவும், நகைச்சுவையாகவும் பதிலளித்து வருகிறார்.  

இ.வ வுக்கு இயல்பாக நகைச்சுவை (பாடிகாட் முனீஸ்வரன் கடிதங்கள்!) கை கூடி வருவதும், அவருக்கு வெட்டி வேலை (cut & paste) பிடித்திருப்பதும், நல்ல கட்&பேஸ்ட் சமாசாரங்களை அவர் கவனத்திற்கு எடுத்து வர பல "செகரட்டரிகள்" அவருக்கு இருப்பதும், எதிலும் ரொம்ப தீவிரம் இல்லாமல் இயல்பாக இருப்பதும் இட்லிவடையின் நீண்ட வலையுலக இன்னிங்க்ஸுக்கு சில காரணங்கள் என்று நினைக்கிறேன்!

ஆரம்ப காலத்தில், நான் என் பதிவுகளில் (ஆச்சரியக்குறி) "!" அதிகம் பயன்படுத்தியதை வைத்து என்னை பயங்கரமாக ஓட்டியிருக்கிறார், அதன் விளைவாக நானும் "!"ஐ சற்று குறைவாகவே பயன்படுத்தி வருகிறேன் :) ஜெயேந்திரர் கைதின்போது நான்  எழுதிய பதிவுக்கு தனது முதல் பின்னூட்டத்தை இட்டு, எனது இப்பதிவின் கருத்துகளுடன் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தனது கருத்துகளை டாப் 10 - ஜெ ஜெ சில குறிப்புகள் என்ற இடுகையில் கூறியிருப்பதாகவும் எழுதியிருந்தார். இ.வ வின் அந்தப் பதிவில் "கிருமி கண்ட சோழன்" "ரங்கராஜன் நம்பி"க்கு செய்த அநியாயத்திற்கு ஒருவர் பொங்கியெழுவதற்கு இணையான ஒரு கோபம் தெரிந்தது ! That was our first & only direct encounter :)

இட்லி வடையார் வலதுசாரி ஆதரவாளர் என்று சொல்வதில் பெரிய ஆச்சரியம் எதுவும் இல்லை.  தமிழ் வலையில் எழுதுபவர்களில் 80% பேர் வலதுசாரி சிந்தனை உடையவர்கள் தான், எல்லாரும் ஒத்துக் கொள்வதில்லை, அதான் மேட்டர்!!!   எதிர்கருத்து உடையவர்களை ராவுவதற்கும், சில சமயங்களில் 'கில்மாஸ்' ஃபோட்டோ  போடுவதற்கும் அனானிமஸாக இருப்பது இ.வ வுக்கு உதவியாக இருக்கிறது.  அதோடு, இ.வ வின் resourcefulness என்னை மிகவும் கவர்ந்த விஷயம்!  அதற்கு உதாரணம், ஒரு "மாபெரும்" வலைப்பதிவு சந்திப்பு சென்னையில் நடந்தபோது, அங்கு எடுத்த புகைப்படங்களை சந்திப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இட்லிவடை வலையேற்றியதைச் சொல்லலாம் :)  அவருக்கு எப்படி இவ்வளவு (தினம் update செய்வதற்கு) நேரமும், உந்துதலும் கிடைக்கிறது என்பது புதிராகவே உள்ளது.  இட்லிவடை, நிறைய சொத்து இருக்கிற, வேலைக்குப் போகத் தேவையில்லாத ஆளாக இருக்கலாம் எனபது என் அனுமானம் ;-)

2005-ஆம் ஆண்டு இறுதியில் இட்லிவடை எழுதிய 2005 டாப் டென் (- 2) வலைப்பதிவுகள் என்ற இடுகை satire வகை நகைச்சுவைக்கு ultimate எடுத்துக்காட்டு என்று கூறுவதில் எனக்கு தயக்கம் இல்லை.   தமிழ்வலையின் Alltime டாப்-5 நகைச்சுவைப் பதிவுகளில் அப்பதிவுக்கு என்றுமே இடமுண்டு, குறிப்பிட்ட பதிவில் அவர் என்னை கலாய்த்திருந்தாலும் கூட :)  அப்போது அவ்விடுகையை வாசிக்காதவர்கள் இப்போது வாசித்து விட பரிந்துரை செய்கிறேன்!

எனது வலைப்பதிவின் 301-வது இடுகையை,  என்னைப் பற்றிய ஒருவிமர்சனப் பதிவாக இட்லிவடை எழுதித் தந்தார்!  மிக நேர்மையான விமர்சனம் அது.  இறுதியாக, இட்லிவடை மேல் எல்லாருக்கும் +/- விமர்சனம் இருக்கும், அதே சமயம் No one can ignore him/her and therein lies இட்லிவடை's popularity and success !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, October 22, 2008

460. மும்பை வன்முறையின் பின்விளைவுகள்

நேற்று எழுதிய பதிவில் சொன்னபடி, போலீசார் நவநிர்மாண் சேனா குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதில், இன்று மும்பையில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் இல்லை என்று தெரிகிறது.  இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பில்லை.  மேலும், அவரை கைது செய்தால் மும்பையில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்றூ மகாராட்டிர அரசு பயந்தது போல, (ராஜ் தாக்கரேக்கு பொது மக்களிடையே ஆதரவு இல்லாததால்!)  இன்று எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே தேர்வு எழுத வந்த வடக்கிந்திய இளைஞர்கள் மீது நேற்று MNS குண்டர்கள் நிகழ்த்திய வன்முறையில், ஒரு பிகாரி இளைஞர் இறந்து போனார்.  அதன் தொடர்ச்சியாக, மும்பையிலிருந்து பாட்னாவுக்கு திரும்பி வந்த மற்ற இளைஞர்கள், ரயில்வே நிலையத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்.   பிரிவினைவாதத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இது போல சங்கிலித் தொடராக பல வன்முறை நிகழ்வுகள் ஏற்படக்கூடிய அபாயத்தை என் நேற்றைய பதிவில் சுட்டியிருந்தேன்.  நல்ல வேளை, வட இந்தியாவில் வேறெங்கிலும் கலாட்டா எதுவும் இல்லை!

ஒரு நல்ல செய்தியையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.  அலகாபாத் மற்றும் பாட்னாவில் வசிக்கும் வட இந்தியர்கள், "காந்திகிரி" (அகிம்சை) வழியை பின்பற்ற முடிவு செய்து, அங்கு வசிக்கும் மராத்தியர்களுக்கும், அங்கிருந்து மும்பைசெல்லும் ரயில்களில் பயணம் செய்யும் மராத்தியர்களுக்கும், பூவும் இனிப்புகளும் தந்து, தாங்கள் ஒற்றுமையையும், அமைதியையும் விழைவதாகக் கூறி நல்லிணக்கத்திற்கு வழிவகை செய்துள்ளனர் !

எ.அ.பாலா

Tuesday, October 21, 2008

459. ராஜ் தாக்கரே என்கிற பாசிச அரக்கன்

மகாராட்டிர நவநிர்மாண் சேனா (MNS) என்கிற அராஜக/பாசிச அமைப்பின் தலைவனாக, மகாராட்டிர மாநிலத்தில் வாழ்ந்து வரும் பிற மாநிலத்தவரை கடந்த பல மாதங்களாக அச்சுறுத்தியும், அவர்கள் மீது வன்முறையைத் தூண்டி விட்டும் அரசியல் லாபம் தேடி வரும் ராஜ் தாக்கரேக்கு இப்போது மறை சுத்தமாக மறை கழண்டு விட்டது அவரது பேச்சின் மூலம் தெரிகிறது !

சமீபத்தில், மும்பையில் ரயில்வே பணிக்கு தேர்வு எழுத வந்த பிற மாநிலத்தவரை MNS குண்டர்கள் கண்மூடித்தனமாக தாக்கியதைத் தொடர்ந்து, அவரை கைது செய்ய அரசு ஆலோசித்தபோது, "என்னை கைது செய்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்" என்றும், "என்னைக் கைது செய்தால், மகாராட்டிரமே பற்றி எரியும்" என்றும் ராஜ் தாக்கரே பிதற்றியுள்ளது!  மேலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில், மகாராட்டிர கொங்கனில் நிலங்களை மராத்தியர் அல்லாதவர்களுக்கு விற்க வேண்டாம் என்றும் அந்த அரை லூசு பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது :(

இன்று ராஜ் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மும்பையில் வன்முறை வெடித்துள்ளது.  MNS குண்டர்கள் தூண்டி விடும் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் தான், அரசியல் லாபத்துக்காக பிரிவினைவாதத்தையும், வன்முறையையும் கருவிகளாக பயன்படுத்த விழையும் போக்குக்கு சாவுமணி அடிக்க முடியும்;  சிலபல அரசியல்வியாதிகளுக்கும் பாடமாக அமையும். 

ஒரு எழவுக்கும் லாயக்கிலாத ராஜ் தாக்கரே போன்ற அரசியல்வியாதிகளுக்கு வேண்டாத விளம்பரம் தந்து, அவர்களின் உருப்படாத பேச்சுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்கள் கட்டுப்படுத்த இயலா அரக்கர்களாக உருவெடுப்பதற்கு மீடியாவின் sensational journalism அணுகுமுறையும் ஒரு மிக முக்கியக் காரணம் என்றால் அது மிகையில்லை.  சமீபத்தில் அமிதாப் சாதாரண அப்பண்டிசிட்டிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றதை நேரடி ஒளிபரப்பு செய்து மீடியா அடித்த அருவருப்பான கூத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் :(

ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் !!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, September 25, 2008

458. கெட்ட போலீஸும் நல்ல போலீஸும்

இரண்டு வாரங்களுக்கு முன் ஜுனியர் விகடனில் வந்த கட்டுரை இது. இதை வாசித்தவுடன் மனது சற்றே கலங்கி விட்டது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தக்க சமயத்தில் உதவிய ஜு.வி பத்திரிகையையும், உடனடி நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியையும் மனதார பாராட்ட வேண்டும். வாசியுங்கள்:
*************************************************************
சில நாட்களுக்கு முன்பு நம்முடைய அலுவலக தொலைபேசி நீண்ட நேரம் அலற... எடுத்து ஹலோ சொன்னோம்.

உடைந்து சிதறியது ஒரு குரல்...

''சார் என் பெயர் அனுராதா... சென்னை எழும்பூரில் இருந்து பேசறேன். போன்ல பேசமுடியாத நிலைமை. எக்மோர் ரயில்வே ஸ்டேஷன் வர்றீங்களா?''

-அந்தக் குரலில் தெரிந்த பதற்றத்துக்கு மதிப்பளித்து எழும்பூர் விரைந்தோம். போனில் சொன்ன அடையாளங் களோடு அனுராதாவை சந்தித்தோம்.

''சார், இதை சொல்றதுல எனக்கு அவமானமோ கூச்சமோ இல்ல. சொல்லப்போனா,

இந்த சமூகம்தான் கூச்சப்படணும். அஞ்சு வருஷத்துக்கு முந்தி நான் விபசாரத் தொழில் செஞ்சேன். என் கணவர் தெனமும் குடிச்சுக்கிட்டே இருப்பாரு. ரெண்டு பெண் குழந்தைங்களைக் காப்பாத்தறதுக்கு வேற வழி தெரியாம ஒரு வேலைக்குப் போனேன். அங்கே என்னை வற்புறுத்தி இந்தத் தொழில்ல இறக்கிட்டாங்க.

உடம்பு முழுசும் உறுத்தலோடுதான் இந்த தொழிலையே செஞ்சேன். என் கணவர் திருந்தி வேலைக்கு போக ஆரம்பிச்சாரு. நானும் இந்தத் தொழிலை விட்டுட்டேன். நாலு வருஷமா வேற நல்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கேன். எல்லாத்தையும் மறந்து என் வாழ்க்கையில கொஞ்சநாள்தான் நிம்மதியா இருந்தேன். ஆனா...'' என்ற அனுராதாவின் கண்கள் ஈரங்கோத்தன.

''போன ஆகஸ்ட் 25-ம் தேதி, சாயங்காலம் 6.30 மணிக்கு இரண்டு பேரு வீட்டுக் கதவைத் தட்டினாங்க. கதவைத் திறந்ததுமே உள்ள நுழைஞ்சு, 'நாங்க போலீஸ§. வீட்டை சோதனை போடனுணும்'னு சொன்னாங்க. என் பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்துச்சுங்க. திடீர்னு அந்த ரூமை வெளிப்பக்கமா தாழ்ப்பாள் போட்டாங்க. 'சார், என் பொண்ணுங்க சத்தியமா சொல்றேன்... நான் தொழிலை விட்டுட்டேன். என்னை நம்புங்க'னு சொன்னேன். அதுல ஒருத்தர், பளாருன்னு கன்னத்துல அடிச்சாரு. 'ஏண்டி... பத்தினி வேஷம் போடறியா? உன் பசங்க படிக்கற ஸ்கூல்ல போய், நீ யாருன்னு சொல்லவா'னு மிரட்டினாரு. 'இந்த வீட்டை சீல் வச்சுட்டு, உன் மேல் கேஸ் போட்டா என்ன பண்ணுவ? நீதான் தொழில் செய்யறீயே, மாமூல் தரமாட்டீயா?'னு கேட்டாங்க. அழுது புரண்டேன். பீரோ சாவியைக் கேட்டாங்க. அது திறந்துதான் இருக்குன்னு சொன்னேன். அதுலருந்த ஏழாயிரம் ரூபாயை எடுத்துக்கிட்டாங்க. 'இது பத்தாது, மொத்தமா அஞ்சு லட்சம் கொடுடி'னு கேட்டாங்க. அவ்ளோ இல்லைன்னு சொன்னதும், மூணு லட்சம் கேட்டாங்க. கடைசியா, ஒரு லட்சம் கேட் டாங்க. பணமே இல்லைன்னு பேங்க் பாஸ் புத்தகத்தையும் காட்டிட்டேன்.

கடைசியில கழுத்துல கெடந்த தாலி செயினைக்கூட அந்தப் பாவிங்க விடல. வீட்டுக்கு வெளியே போய் இருங்கன்னு சொல்லிட்டு, பொண்ணுங்க படிச்சுக்கிட்டு இருந்த ரூமுக்கு போனேன். பெரியம்மா வீட்டு வரைக் கும் போயிட்டு வந்துடறதா சொல்லி, வெளியே இருந்த ஆளுங்களோட ஆட்டோவுல போனேன். தாலி சங்கிலியை வித்து, 30 ஆயிரத்து 450 ரூபாய் கொடுத்தேன். எனக்கு ஆட்டோவுக்காக 100 ரூபாய் கொடுத்தாங்க. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் போன் செஞ்சி 'நாளைக்கு 70 ஆயிரம் தரணும். இல்லன்னா, உன் வீட்டுக்காரன்கிட்டேயும் பசங்ககிட்டேயும் விஷயத்தை சொல்லிடுவோம்'னு மிரட்டினாங்க. வேற வழியில்லாமதான் சார், உங்களுக்கு போன் பண்றேன். போலீஸ§க்குப் போனா, எனக்கு வழி கிடைக்காது'' என்ற அனுராதாவின் கண்ணீருக்கு அணை போட முடியவில்லை.

அனுராதாவின் அவலத்தை உடனே மத்திய சென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்துக்குத் தெரியப்படுத்தினோம். அனுராதாவிடம் போன் செய்து, 70 ஆயிரம் ரூபாய் கேட்டவனின் மொபைல் எண்ணைப் பெற்று, இணை கமிஷனரிடம் கொடுத்தோம்.

அவர் எடுத்த துரித நடவடிக்கையால், மறுநாள் 26-ம் தேதி இரவே விபசார தடுப்புப் பிரிவு போலீஸ்காரர் களான பாஸ்கரன், மனோகரன் இருவரும் பிடிபட்டனர். அதிர்ந்துபோன இணை கமிஷனர், உடனடியாக கமிஷனர் சேகர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார்.

தொடர்ந்த விசாரணையில்... அந்த போலீஸாரோடு வக்கீல் ஒருவரும் சிக்கினார். அவர் தற்போது ஒரு அரசு வக்கீலிடம் ஜூனியராக இருந்து வருகிறார். நடந்த சம்பவங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார் கமிஷனர் சேகர். இந்த விசாரணையை, மத்திய குற்றப் பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி நடத்தி முடித்து, கமிஷனருக்கு அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

அனுராதாவிடம் இருந்து, 'பணப்பறிப்பு' செய்தது ஊர்ஜிதமானதும் உடனடி நடவடிக்கையாக பாஸ்கரன், மனோகரன் உட்பட சம்பந்தப்பட்ட பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், தலைமைக் காவலர்கள் அரிகிருஷ்ணன், குமார் ஆகியோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பாஸ்கரனும், மனோகரனும் அனுராதாவின் வீட்டில் எடுத்த ஏழாயிரம் ரூபாயையும், மார்வாடி கடையில் விற்கப்பட்ட தாலி சங்கிலியையும் போலீஸார் மீட்டு அனுராதாவிடமே கொடுத்து விட்டார்கள்.

இதுவேதான், அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் பியூட்டி பார்லரில் ஏற்கெனவே பணம் கேட்டு மிரட்டி மாட்டிக்கொண்ட கும்பலாம்.

நடவடிக்கைக்கு நன்றி சொல்லி, இணை கமிஷனர் பாலசுப்பிரமணியத்திடம் நாம் பேசியபோது, ''விசாரணை தொடர்கிறது. அதன் முடிவில், வேறு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் உறுதியாக.

'மனசாட்சியை விற்றுப் பிழைக்கிற கேவலத்தைவிடவா கொடியது விபசாரம்?' என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது!

நன்றி: ஜுனியர் விகடன்

Monday, September 22, 2008

457. ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமி அஞ்சலி - கி.அ.அ.அனானி

தமிழ் நாட்டில் தான் மின்சார உற்பத்தி பிரச்சினை இருக்கிறதே..ஏதோ நம்மாலானது..கணினியை பயன் படுத்தாமல் மின்சாரத்தை மிச்சப் படுத்தலாமே என்று ரொம்ப நாளாக டி.வி பார்க்காமலும், வலைப்பதிவுகளை லுக் உட கணனியை ஆன் செய்யாமலும் இருந்தேன் (இதுனால எனக்கோ அல்லது நாட்டுக்கோ அல்லது தமிழ் கூறும் நல்லுலகுக்கோ எந்த நஷ்டமும் இல்லை அப்படீன்னு நீங்க சொல்லுறதும் சரிதான்) .

ரொம்ப நாளுக்கு பிறகு இன்று தான் 'நிலைமை சீரடைந்து விடும்' என்று ஆற்காடு வீராசாமி கொடுத்த தைரியத்தில் ஒரு பத்து நிமிடம் டி வி பார்த்துக் கொண்டிருந்தேன். விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்று ஏதோ ஒரு நிகழ்ச்சி .  அதில் பேச்சாளர் தாமஸ் ஆல்வா எடிசன் ( பல்ப் கண்டு பிடிச்சாரே அவர்தான்) மறைந்த தினத்தில் அமெரிக்கர்கள் "அனைத்து மின்சார விளக்குகளையும் அணைத்து" அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.  தேவாலயத்திலும் கூட வெறும் மெழுகு வர்த்திகளை மட்டும் ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் என்று உணர்ச்சி பொங்க பேசிக் கொண்டிருந்தார். இதைத்தான நம்ம ஆற்காடு வீராசாமி அமல் படுத்தி தமிழகத்துல தினம் தோறும் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு  அஞ்சலி செலுத்திக்கிட்டிருக்காரு. 

அவருடைய விஞ்ஞானத்தின் மேலான அபரிமிதமான மரியாதைக்கு ஏன் மக்கள் இப்படி அராஜகமா எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க அப்படீன்னு ஆச்சரியப் பட்டுக்கிட்டு அப்படியே வேறு சானலுக்கு போனால் அங்கு ஆற்காடு வீராசாமி உண்மையாகவே வீராவேசமாக சாமியாடிக் கொண்டிருந்தார், மேட்டர் என்ன என்றால் மின் வெட்டுக்காக அவரையும் முதலமைச்சரையும் பதவி விலகச் சொல்லி சில பல எதிர்க்கட்சிகள் சொல்லியிருந்ததற்கு அவர் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்?!!!

"தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலும், பின்னர் ஜெயலலிதா காலத்திலும் மின் வெட்டு இருந்திருக்கிறது.அவர்கள் அப்போது பதவி விலகி முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தால் இப்போது எங்களைச் சொல்லலாம்.அப்படி அவர்கள் செய்யவில்லையே" என்று புத்திசாலித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.  அது சரி.. "நீங்க சுயமா யோசிக்க மாட்டீங்களா? நீங்க எதுக்கும் முன்னுதாரணமாக இருக்க மாட்டீங்களா? என்று எழுந்த கேள்விகளை மனதுக்குள் அடக்கிக் கொண்டு அடுத்த சானலுக்கு போகலாம் என்று ரிமோட்டை எடுத்தால் படக்கென்று டி.வி அணைந்து விட்டது.  வேறென்ன "தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஆற்காடு வீராசாமியின் இன்றைய அஞ்சலி " தொடங்கி விட்டது.

---கி.அ.அ.அனானி

Sunday, September 21, 2008

456. இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது? - கி.அ.அ.அனானி

முன்னுரை: ரொம்ப ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. வந்து ஒரு வாரம் ஆகியும், அதை வாசித்து விட்டு இன்று தான் பதிகிறேன் ! கி.அ.அ.அ தாமதத்திற்கு கடுப்பாக மாட்டார் என்று நினைக்கிறேன். கடந்த வாரம் முழுதும் ஆபிஸில் ஒரே ரென்ஷன் !!! இன்னும் சில மேட்டர்களும் அவர் அனுப்பியிருக்கிறார். வாசித்து சென்சார் செய்த பின், அவையும் பிரசுரிக்கப்படும் :) எப்போதும் போல், பின்னூட்டங்களுக்கு அவரே பதில் தருவார், அதாவது கி.அ.அ.அ will stand and play :) கி.அ.அ.அ மேட்டர் கீழே:
**************************************************

ஆயிற்று ...அனேகமாக இந்த வருட கடைசியில் பாராளுமன்றத் தேர்தல் வந்தே விடும் என்று எல்லா தரப்பிலும் பேசத் துவங்கி விட்டனர். கட்சிகள்அதற்கான கூட்டணிகளிலும்,தேர்தல் வியூகங்களிலுமிறங்கத் தயாராகி விட்டனர்.தமிழகத்திலும் சில விலகல்களும் ஈர்த்தல்களும் சேர்த்தல்களும் ,அறிவிப்புகளும் நடக்கத் தொடங்கி விட்டன.கருணாநிதியும் நாளொரு இலவசம், பொழுதொரு திட்டம் எனத் தயாராகி விட்டார். ஜெ தரப்பில் சுறு சுறுப்பாக அறிக்கைகளும், காஸ் விலை முதல் கக்கூஸ் அடைத்துக் கொண்டது வரையிலான அனைத்து விஷயங்களுக்கும் மறியல் போராட்டங்கள் என போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது..நிரந்தர எதிரியும் கிடையாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும் கூட ஓட்டு அரசியலுக்கு ஏற்றவாறு அமையும் சில கூட்டணி முடிவுகளை ஒரு தேர்தல் வரையாவது அனுமானிக்க முடியும்.

உதாரணமாக வரும் தேர்தலில் பமக திமுக உறவு என்பது நடவாத ஒரு விஷயம் .

அதே போல திமுகவும் காங்கிரஸுடனான தங்களது உறவுக்காக ( தமிழகத்தில் மீதமுள்ள மூன்றாண்டு ஆட்சிக் காலத்தையும் கணக்கில் கொண்டே கூட்டணியை நீட்டிக்க தி மு க ஆவல் கொண்டுள்ளது) கம்யூனிஸ்டுகளை உதறத் தயாராகி விட்டனர்.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பெரியதாக எந்த சாய்ஸும் இல்லை. பாஜக இல்லாத அதிமுக கூட்டணி அல்லது ஒரு மூன்றாவது கூட்டணி என்பதில் இரண்டில் ஒன்றுதான் இவர்களது முடிவாக இருக்கமுடியும்( தனித்துப் போட்டி என்ற தற்கொலை முயற்சியை தவிர்த்து)

அதிமுகவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளா / பாஜகவா என்று வரும் போது அவர்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.அதில்தான் அவர்களுக்கு ஆதாயம்.கம்யூனிஸ்டுகளுக்கு தொழிற்சங்கங்களில் உள்ள செல்வாக்கு மற்றும் உறுப்பினர் பலம் இரண்டும் பஜகவிற்கு தமிழகத்தில் கிடைக்கும் ஓட்டுக்களை விட அதிகம் என்பது கண்கூடு.அதுவும் தவிர தேர்தலுக்கு பின் ஒரு வேளை பஜக அரசு அமையும் பட்சத்தில் ஜெயலலிதா எந்த குற்ற உணற்வோ அல்லது கூச்சமோ இல்லாமல் கம்யூனிஸ்டுகளை கை கழுவி விட்டு பா ஜ க அரசில் ஐக்கியமாகி விடும் சந்தர்ப்பம் மிக அதிகம் ( இதற்குத் தேவை சில எம் பிக்கள் மட்டுமே) ஆட்சியமைக்க எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பாஜகவும் இவர்களை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்பதும் திண்ணம்.

மற்ற கட்சிகளைக் கணக்கில் கொண்டால் வைகோ அனேகமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதிமுகா கூட்டணியில்தான் இருப்பார்( இதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் செஞ்சி ராமசந்திரன் குழுவை தி மு க ஆதரித்து மதிமுகவை உடைக்க முயன்றது..அதனால் அதிமுகவுடன் சீட் பேரம் படியாவிட்டாலும் கூட இந்தத் தேர்தல் முடியும் வரையிலாவது வைகோ கலைஞர் தோளில் சாய்ந்து பழங்கதை பேசி கண்ணீர் விடும் நாடகம் அரங்கேர வாய்ப்பில்லை.)

பமகவைப் பொறுத்த மட்டில் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தற்கொலை முடிவைத் தவிர அவர்களிடம் உள்ள ஒரே சாய்ஸ் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான்.(ஏனெனில் விஜயகாந்துடன் இணைந்தால் கூட்டணியில் யார் பெரியண்ணன் என்று ஏற்படும் முரண்பாட்டை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள்...அடுத்த தேர்தல் வரையிலாவது)இதனாலேயே அதிமுகவை நோக்கிய தங்களது காய் நகர்த்தலை தொடங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

கருணாநிதி போன தேர்தலில் இரண்டு ரூபாய் அரிசியும் இலவச கலர் டி வி யும் , ஒட்டுப் போட்ட துணிபோல கொள்கையில்லாத கூட்டணியும் ஆட்சியைப் பெற்றுத்தந்தது போலவே இந்த முறையும் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் அறிவிப்புகளையும் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி,50 ரூபாய்க்கு 10 மளிகை சாமான் என்பது போல பம்மாத்துத் திட்டங்களை அள்ளி விடத் தொடங்கி விட்டார்..தனது /காங்கிரஸ் ஆட்சியின் தோல்விகளும் ,வாரிசு அரசியலால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயராலும், கூட்டணியின் விரிசல்களாலும் ஆட்சியின் அடித்தளம் ஆடிப் போயிருப்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.

காங்கிரசையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியையும் அறிவித்து விடுவார் போலத்தான் தெரிகிறது.அதில் கோஷ்டி சண்டையும் பூசலும் குழப்பமும் அன்றி வேரெதுவும் மிஞ்சப் போவதில்லை.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் ஒரு சேர அதிகார பலம் மிக்க பதவிகள் கிடைத்தும் மக்களுக்காக ஒன்றும் கிழிக்காதவர்கள், உருப்படியாக எந்த ஒரு மக்கள் நல தொலை யோக்கு திட்டத்தையும் நிறைவேற்ற லாயக்கற்றவர்கள் அடுத்த முரை வெற்றி பெற்றால் என்ன சாதித்து விடப் போகிறார்கள். அதிலும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஒரு இடத்தில் இவர்களது ஆட்சியும் மற்ற இடத்தில் எதிர் அணி ஆட்சியோ இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இவர்களுக்கு ஓட்டுப் போடுவது பாலுக்காக மலட்டு மாட்டை வாங்குவது போன்றது.

ஜெயலலிதாவைப் பொருத்த வரை அவருக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.ஏதோ பிக்ஸட் டெபாஸிட்டில் போட்டிருந்த பணம் 5 வருடம் கழித்து மெச்சூராகி கைக்கு வருவது போல் அடுத்து எனதாட்சிதான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்...போன முறை ஆட்சியில் இருந்த போது நான் என்ன சாதித்தேன்..இப்போது எதிர்க்கட்சியாக என்ன கிழித்தேன் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே இல்லை. கருணாநிதியின் மாற்று நான் மட்டுமே என்பதாக மமதையில் அலைகிறார்.இதனால் இவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தேரும் என்பது கிட்டத்தட்ட உணரமுடிகிறது. இவர்களுக்கு ஓட்டுப் போடுவதென்பது கிட்டத்தட்ட உயிர் போகும் என்று தெரிந்தே கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

இதற்கு ஒரே மாற்று தமிழகத்தில் ஒரு மூன்றாவது அணி உருவாவதே ஆகும்.அந்த மூன்றாவது அணியை உருவாக்கக் கூடிய ஒரே நம்பிக்கை இந்தத் தேர்தலைப் பொறுத்த மட்டிலும் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பா.ம.க ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக களம் இறங்குவது என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு ஆட்சியை தரவல்ல சூழலை ஏற்படுத்துவதோடு, கேப்டனின் முதலமைச்சர் கனவுக்கும் அது ஏற்றமாதிரி அமையும்.

விஜகாந்திடம் கொள்கை இருக்கிறதா?அனுபவம் இருக்கிறதா? நடிகர் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட கேள்விகளையும் ஆட்சேபணைகளையும் வீசலாம்.ஆனால் அதையெல்லாம் கடந்து இந்த அதிமுக, திமுக என்ற இரு நோய்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஒரு இடைக்கால நிவாரணி என்ற அளவிலாவது அவருக்கு ஒரு சந்தர்பம் தருவதில் எந்தத் தவறும் இல்லை.விஜயகாந்த் தவறுகள் செய்திருக்கலாம்.ஆட்சி அனுபவமோ அல்லது அரசியல் தந்திரமோ,புள்ளி விவரங்களோ ,பேச்சு வன்மையோ பெற்றவராக இல்லாதிருக்கலாம்.ஆனால் இது வரை ஆட்சியில் இருந்த யாரும் புனிதருமல்ல,பிறவி மேதைகளாக வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை.அதனால் விஜயகாந்தும் வெற்றி பெற்று பின் அரசியல் அனுபவம் பெறுவதனால் எந்த குடியும் முழுகி விடப் போவதுமில்லை.

அவரது நிறைகள் என்று பார்த்தோமானால்

ரஜினிகாந்த் மாதிரி இத்தனை ரசிகர் பலம் இருந்தும் , ஜெயிப்போம் என்ற நிலைமை இருந்தும் அரசியலில் இறங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டு வெறும் "வாய்ஸ்" மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காமல் துணிந்து இறங்கியது.

ஏதாவது ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பதவிகளும் மற்ற பிறவற்றையும் அனுபவிக்கும் நிலை இருந்தும், சரியோ தவறோ தனிக் கட்சி ஆரம்பித்து நடத்துவது

அப்படி ஆரம்பித்த கட்சியை வெற்றிகரமாக 4 ஆண்டுகளாக நடத்துவது

எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று சொன்னதுமில்லாமல் இரண்டு தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுக் காட்டியது

இன்ரைய காலகட்டத்தில் கருணாநிதி, ஜெயலலித என்ற இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஓரளவு பெயரெடுத்த ஒரே கட்சி விஜயகாந்தின் கட்சி மட்டுமே


ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை போன்ற சில விஷயங்களுக்காக் இவர் நடத்திய போராட்டங்கள் அரசையே சற்றே நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளதென்பதும் உண்மை

அதனால் தான் சொல்கிறேன்..இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது ???

Tuesday, September 16, 2008

455. மங்களூர்-உடுப்பி மதக்கலவரம்

ஒரிஸாவில் இப்போது தான் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிற நேரத்தில், மங்களூரிலும் உடுப்பியிலும் கலவரம் வெடித்துள்ளது.  மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு சில இந்து அமைப்புகள் கலவரத்திற்கு தூபம் போட்டுள்ள செயல் கடுமையான கண்டனத்துக்குரியது.  கர்னாடகாவில் முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பிஜேபி இது போன்ற கலவரங்களை வேடிக்கை பார்க்காமல், முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.  தீவிர இந்துத்வா முத்திரை குத்தப்படுவதால் பிரச்சினைகள் அதிகமாகின்றனவே அன்றி சுமுகமான தீர்வுகள் பிறப்பதில்லை !

New Life Fellowship என்ற கிறித்துவ அமைப்பு, இந்துக் கடவுளர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில் பிரசுரங்கள் தயாரித்து விநியோகித்தது தான் தேவலாயங்கள் மீது நடந்த தாக்குதல்களுக்கு மூல காரணம் என்று சில இந்து அமைப்புகள் கூறுகின்றன.  எது எப்படியிருந்தாலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சரியாகாது, இந்த சகிப்புத்தன்மையற்ற போக்கு கண்டனத்துக்குரியது ! 

கர்னாடகா அரசு சற்று சுதாரித்துக் கொண்டு பலரை கைது செய்துள்ளது. போலீஸ் பந்தோபஸ்த்தையும் அதிகரித்துள்ளது. முதல்வர் எட்டியூரப்பா, சேதம் அடைந்துள்ள தேவாலயங்களை சீரமைக்கும் செலவை அரசு ஏற்றுக் கொள்ளும் என்று கூறியுள்ளார்.  உருப்படாத காங்கிரஸ் மற்றும் தேவகௌடாவின் ஜனதா தள தலைவர்கள், கர்னாடகாவின் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பேசியிருக்கின்றனர்.  சிவராஜ் பாட்டில் போன்ற ஒரு மத்திய உள்துறை அமைச்சரை வைத்துக் கொண்டு வக்கற்ற காங்கிரஸ் கட்சிக்கு இத்தனை திமிர் ஆகாது !!! 

எ.அ.பாலா

Saturday, September 13, 2008

454. தில்லியில் தொடர் குண்டுவெடிப்பும் துப்பு கெட்ட அரசும்

இன்று மாலை 6.15 மணி அளவில் சுமார் 45 நிமிடங்களில் தில்லியில் 5 இடங்களில் குண்டு வெடித்ததில், இது வரை வந்த செய்திகளின்படி, சுமார் 20 பேர் பலியாயினர், 90 பேர் காயம். கரோல் பாக், பரகாம்பா ரோடு, கன்னாட் பிளேஸ், கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் மார்க்கெட் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. டிவி செய்திகளில், சிதறடிக்கப்பட்டவர்களையும், அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்களையும் பார்த்தபோது நெஞ்சம் கனத்துப் போனதோடு, இரக்கமற்ற தீவிரவாத அரக்கர்கள் மீதும், காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத, பொறுப்பில்லாத, திடமில்லாத அரசு சார்ந்த அமைப்புகள் மீதும் அசாத்திய கோபம் ஏற்பட்டது.

தொடர்ந்து, ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் என்று தீவிரவாதம் திட்டம் தீட்டி துல்லியமாக நாட்டிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியும், உருப்படியாக எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கத் துப்பில்லாமல், சதாசர்வ காலமும், அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேற்றுவது ஒன்றை மட்டுமே தனது வாழ்க்கைக் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் பிரதமரும், அவரது லாயக்கற்ற சகாக்களும் தான் இந்த அவல நிலைக்கு முழு பொறுப்பு :(

தீவிரவாததிற்கு எதிராக மத்திய அரசு தானும் எந்த ஒரு திடமான முடிவும் எடுக்காமல், பெருமளவு பாதிப்புக்கு ஆளான குஜராத்தில் மோடி தீவிரவாதத்தை ஒடுக்க எடுத்து வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றுள்ள கேவலமான செயல் குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை !!!

அநியாயமாக உயிரிழந்த அப்பாவிகளுக்கு என் அஞ்சலியையும், நாடாளும் தகுதியற்ற இந்த மத்திய அரசுக்கு எதிரான என் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

எ.அ.பாலா

Wednesday, August 13, 2008

453. சென்னையின் நாதியற்ற புராதானச் சின்னங்கள்

சென்னையின் புராதானச் சின்னங்களான பல ஆங்கிலேய காலத்துக் கட்டடங்கள் (Heritage buildings) பராமரிப்புக்கான சரியான அரசு திட்டம் இல்லாததால், நாதியற்று சீரழிந்து சிதிலமடைந்து (அல்லது இடிக்கப்பட்டு!) வருகின்றன. சென்னையில் 200-க்கும் மேற்பட்ட (100 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க) வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் இருந்தும், இவற்றைப் பாதுகாக்க சட்டம் (Heritage act) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் சில மக்கட் போராட்டத்தால் காப்பற்றப்பட்டிருப்பினும், அவற்றை பாதுகாப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை :( சென்னை தனது வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களை (கேட்பார் / கவனிப்பார் அற்று) கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

1. கோகலே கூடம்: 94 வருடங்கள் பழமையான இதன் உட்பகுதிகள், நீதிமன்றத்தின் தடை (இன்று) வருவதற்கு முன்பாகவே, இடிக்கப்பட்டு விட்டன. YMIA-இல் உள்ள சிலரது பண ஆசைக்கு இது பலியாகி விட்டது. பெசண்ட் நினைவுக் கட்டடம் (Besant Memorial Building) என்றும் அழைக்கப்படும் இது ஆர்மேனியன் தெருவில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தான் அன்னி பெசண்ட் அம்மையார் சுயாட்சிக்கான போராட்டத்தை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "விழித்தெழு இந்தியா" என்ற தலைப்பில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் உரைகளை அன்னி பெசண்ட் அம்மையார் இதே கூடத்திலிருந்து தான் நிகழ்த்தினார்!

இது 30000 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மாடிக் கட்டடம் இது. 1916-இல் இவ்விடத்தில் சுயாட்சி லீக் தொடங்கப்பட்டது. கோகலே கூடத்தில் மகாத்மா காந்தி, தாகூர், சத்தியமூர்த்தி போன்றோர் பிரசித்தி பெற்ற எழுச்சி உரைகளை ந்கழ்த்தியுள்ளனர். அன்னி பெசண்ட் அம்மையார் 'மதராஸ் பாராளுமன்றம்' (Madras Parliament) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கமே, VK கிருஷ்ணமேனன், KC ரெட்டி (கர்னாடகாவின் முதல் முதல்வர்), R வெங்கட்ராமன் போன்றோருக்கு பயிற்சிக்களமாக விளங்கியது.

அது போலவே, 1940, 1950களில் பிரசித்தி பெற்ற கர்னாடக இசை மேதைகளான முசிரி சுப்ரமணிய ஐயர், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், ராஜரத்தினம் பிள்ளை, GN பாலசுப்ரமணியம், KP சுந்தராம்பாள், DK பட்டம்மாள் போன்றொர் இங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

இப்போது அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதன் வெளிப்புறத்தையாவது சீரமைக்க முடியுமா என்று YMIA-வில் நல்லவர் யாராவது யோசிப்பார் என்று நம்புவோம் !

இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையதும், பாரம்பரியச் சிறப்பு மிக்கதுமானவற்றின் மீது கூட அக்கறை இல்லாத நாமெல்லாம் உருப்படுவோமா ? :(

2. அட்மிரால்டி ஹவுஸ்: சட்டமன்ற உறுப்பினர் விடுதி அமைந்துள்ள அரசு எஸ்டேட் வளாகத்தில் இருக்கும், 208 வருட பாரம்பரியமிக்க இந்த கட்டடத்தை, அரசு மனது வைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அடிப்படை பராமரிப்பு கூட இல்லாமல் சீரழிந்து போய் இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இக்கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அவ்விடத்தில், ரூ.200 கோடி செலவில் சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.

3. காவல் தலைமையகம், மெரினா: INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) என்ற அமைப்பும், சில புராதான ஆர்வலர்களும் சேர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியதால், ஆங்கிலேயக் கட்டடக் கலையின் (Colonial Architecture) சிறப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும், 70 வருட பழமையான இக்கட்டடம், இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. 1996-இல் புதுப்பிக்கப்பட்டது.

4. ராணி மேரிக் கல்லூரி, மெரினா: 110 ஆண்டுகள் பழமையான இவ்வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அங்கு புத்தம்புது சட்டமன்ற வளாகம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெ தீட்டிய திட்டம் ஆசிரியர்-மாணவி கூட்டணியின் போராட்டத்தால் கைவிடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்றாக வேண்டிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் TR.பாலு ஜெயலலிதாவை தோற்கடிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்றாலும், இந்த புராதானச் சின்னம் காப்பாற்றப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சியே.

5. பாரத் இன்சூரன்ஸ் கட்டடம், அண்ணா சாலை: 1897-இல் "கார்டில் பில்டிங்" என்ற பெயரில் கட்டப்பட்ட இது, இந்தோ-சரசெனிக் கட்டடக்கலைக்கு (Indo-Saracenic architecture) ஓர் அற்புதமான வரலாற்றுச் சான்றாக, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளரான LIC நிறுவனம், ஆகஸ்ட் 2006-இல் (பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் செலவு அதிகமாகிறது என்ற காரணத்துடன்!) இதை இடிக்க முற்பட்டபோது, INTACH நீதிமன்றம் சென்று இடிப்பதை தடுத்து நிறுத்தியது. தற்போது இக்கட்டடம், கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.

உங்களுக்காக, இன்னும் சில புராதானச் சின்னங்களின் புகைப்படங்கள்:

விவேகானந்தர் இல்லம் (1842)


ரிப்பன் கட்டடம் (1913)


சாந்தோம் சர்ச் (பதினாறாம் நூற்றாண்டு)


தியோசாபிகல் ஸொஸைடி (அடையாறு)


செனேட் இல்லம் (1874, சென்னைப் பல்கலைக்கழக வளாகம்)

எ.அ.பாலா

சில புகைப்படங்களுக்கு நன்றி:
http://timkarolsvoboda.blogspot.com
http://flickr.com/photos/bratboy76/

Friday, August 08, 2008

452. அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்து விட்டது!

எனது இந்தப் பதிவில் இட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக நமது தமிழிணைய நல்ல உள்ளங்களின் ஆதரவோடு திரட்டிய தொகையைக் கொண்டு வாங்கிய (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலி நேற்று நண்பர் அந்தோணியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தானியங்கி சக்கர நாற்காலியின் வாயிலாக அவரால் தானாகவே வெளியிடங்களுக்குச் சென்று வர இயலும். ஒரு முறை பாட்டரியை சார்ஜ் செய்தால், 7 கி.மீ வரை பிரயாணிக்க இயலும். அந்தோணிக்கு சக்கர நாற்காலி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்பது அவர் என்னிடம் தொலைபேசியதிலிருந்தே தெரிந்தது!

இந்த சமயத்தில் பொருளுதவி செய்த அன்பு நண்பர்களுக்கும், அந்தோணியை வாழ்த்திய அன்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இதற்கு முன்னால், அந்தோணிக்கு நமது கூட்டு முயற்சியின் வாயிலாக ஒரு மடிக்கணினி வாங்கித் தரப்பட்டது. அது தொடர்பான எனது பதிவையும் வாசிக்கவும். இதன் வாயிலாக, அந்தோணி வீட்டிலிருந்தபடியே கணினி சார்ந்த பணி ஒன்றை மேற்கொண்டு (working from home) தன் தேவைகளுக்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்க முடிகிறது.

உங்கள் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் அந்தோணி மென்மேலும் வளர்வதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கும் !

அந்தோணியின் தமிழ் வலையகம் இது

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, August 02, 2008

451. தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாக - இட்லிவடையை முந்திய பாலா

ரஜினியின் சுயநலம்-சரத்குமார், தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்

சென்னை: தனது படம் கர்நாடகத்தில் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டுள்ளது அவரது சுய நலத்தையே வெளிப்படுத்துகிறது என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

குசேலன் படம் கர்நாடகத்தில் சிக்கல் இல்லாமல் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக கன்னட அமைப்புகளிடம், தான் ஓகனேக்கல் விவகாரம் குறித்து சென்னையில் பேசியது தவறு, இனிமேல் அப்படிப் பேச மாட்டேன், பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று நேரடியாக மன்னிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் வருத்தம் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி சுயநலமாக பேசியுள்ளார் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் பேசியது தவறு என்று ரஜினி கூறியுள்ளார். அவர் இங்குதான் வளர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில், வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று.

தனது படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ரஜினி வருத்தம் தெரிவித்திருந்தால் அது நிச்சயம் சுய நலம்தான். இது தவறான பேச்சு என்றார் சரத்குமார்.

தமிழர்களுக்கு அவமானம்-சத்யராஜ்:

ரஜினியின் வருத்தம் குறித்து சத்யராஜ் கருத்து தெரிவிக்கையில், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்டுத்தி விட்டார்.

என்னை பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக் கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன் என்றார்.

பரந்த மனப்பான்மை-பாரதிராஜா:

இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்றார்.

நியாயம்தான்-கலைப்புலி சேகரன்:

தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்றார்.


இந்து மக்கள் கட்சி கண்டனம்:

இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,

ஒகேனக்கல் குடிநீர் பிரச்சினைக்காக தமிழ் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.

ஆனால் இன்றோ தனது குசேலன் படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுவோ என்ற அச்சத்தில் கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன் என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.

தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுவோ என்று அவர் அச்சப்படுகிறார்.

உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ஆவேசமாக கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதித்த வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

நன்றி: தட்ஸ்டாமில்.காம் வலைத்தளம்

Thursday, July 31, 2008

450. தீவிரவாதம் கருக்கிய மலர்கள்

"அம்மா, எனக்கு தாகமா இருக்கு, கொஞ்சம் தண்ணி தாயேன்" என்றும், "அம்மா, ஏன் எனக்கு சாப்பிட ஒண்ணுமே தர மாட்டேன்கிற, பசிக்குது" என்றும், "அம்மா, என்னை அப்பாகிட்ட கூட்டிட்டுப் போயேன்" என்றும் நெருப்பில் இட்ட புழுவாக, யாஷ் என்கிற அந்த 9 வயது பாலகனின் வேதனை அலறல்,பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக உள்ளது :( தனது கணவனை சமீபத்திய அகமதாபாத் குண்டு வெடிப்பில் பறி கொடுத்த (கீதா என்கிற) அந்தத் தாய், தன் மகனின் நிலையைக் கண்டு வெடித்து அழுவதைப் பார்க்கையில், 'கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா' என்ற ஆதார சந்தேகம் வருகிறது :(

மேற்கூறிய காட்சி, அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் தீக்காய சிகிச்சைப் பிரிவில்! அதே மருத்துவமனை வாசலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின் காரணமாக 50% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் யாஷுக்கு, டாக்டரின் அனுமதியின்றி ஒரு சொட்டுத் தண்ணீரோ, உணவோ தர இயலாத நிலையில் கீதா பரிதவிப்பது காணச் சகிக்காததாக இருக்கிறது. டிரிப் வழியாக குளுகோஸுடன் பல மருந்துகள் யாஷுக்கு ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாஷின் அண்ணன் ரோஹன், அதே மருத்துவமனையில் 80% தீப்புண்களுடன் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறான்.

தீவிரவாதத் தாக்குதலின் கட்டுப்பாடற்ற, சிறிதளவும் மனிதநேயமற்ற குரூரத்தை, இந்த இரு குழந்தைகளின் அவல நிலையே காண்பவர், தெளிவாக உணர முடியும். அதே சிகிச்சைப் பிரிவில், உடல் முழுதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் சுனில் என்பவர், மிக்க மன உறுதியோடு, "என் வலியுடன் என்னால் போராட முடியும். ஆனால், எந்தத் தவறும் செய்யாத இக்குழந்தைகள் வேதனையில் துடிப்பதையும் அலறுவதையும் பார்க்கையில் என் இதயம் வெடித்து விடுவது போல இருக்கிறது!" என்று கூறுகிறார். மொத்த மருத்துவமனையும் அக்குழந்தைகளுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது.

அந்த சிவில் மருத்துவமனையின் வாசலில் அவரது இரு மகன்களுக்கு, தந்தையான வியாஸ் (அவர்களுக்காக வாங்கிய புது) சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தபோது தான், குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்தவர்களுடன் முதல் ஆம்புலன்ஸ் வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. எமன் காத்துக் கொண்டிருந்தது தெரியாமல் அவர்களின் சைக்கிள் நேராக குண்டு வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி பயணித்தபோது, குண்டு வெடித்து, வியாஸ் சிதறடிக்கப்பட்டார். மற்றும் 11 பேர் (இதில் ஒரு டாக்டர் தம்பதியும் அடக்கம்!) பலியாயினர் :(

அடிபட்டவருக்கு உதவி செய்ய ஓடோ டி வந்த 20 வயது பவேஷ், மருத்துவமனை குண்டு வெடிப்பில் படு காயமடைந்து, அதே மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார். குண்டு வெடிப்பில் அடிபட்ட பல நபர்களை மருத்துவமனைக்கு கூட்டி வந்த வினோத் என்கிற ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனை குண்டு வெடிப்பில் சிக்கி, இரு கால்களும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக காட்சியளிக்கிறார் ! அந்த வேதனையிலும், "இனி கஷ்டத்தில் இருக்கும் யாருக்கும் என்னால் உதவ முடியாதே" என்று அரற்றுகிறார் :( What a senseless and mindless act of violence unleashed by these terrorists!

அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கியவர்கள் அங்கிருக்கும் 2 முக்கிய அரசு மருத்துவமனைகளுக்குத் தான் எடுத்து வரப்படுவார்கள் என்று சரியாக கணித்து, இந்த 2 மருத்துவமனைகளில் சரியான நேரத்தில் குண்டு வெடிக்குமாறு தீவிரவாதிகள் திட்டமிட்டுச் செய்துள்ளனர்.

ஈவு இரக்கமில்லாமல் அப்பாவிகளை வேட்டையாடும் இந்த தீவிரவாத அரக்கர்களை என்ன செய்தால் தகும் ?

எ.அ.பாலா

நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

Thursday, July 24, 2008

449. புராதானச் சென்னையின் கட்டுப்பாடற்ற பேருந்துப் பயணங்கள்!

ஜே.எஸ்.ராகவன் என்பவர் எழுதி, சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான இந்த "மலரும் நினைவுகள்" கட்டுரையை (இயன்றவரை நகைச்சுவைக்கு பங்கம் ஏற்படாதவாறு!) தமிழ்ப்படுத்தியிருக்கிறேன்.
********************
இரண்டாம் உலகப்போர் முடிவில், நிலக்கரிக்கு மாற்றாக பெட்ரோல் எரிபொருளாக பயன்படத் துவங்கிய காலத்தில், பூந்தமல்லிக்கும் பிராட்வேக்கும் இடையே, நெரிசல் இல்லாத சாலைகளில் பறந்த அந்த தனியார் பேருந்துகள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளன. ஆங்கிலேயக் கொலையால் 'பூனமல்லே' என்று திரிந்த பூவிருந்தவல்லியைப் பற்றி பேசும்போது, அப்போது அங்கு அமோகமாக வளர்ந்த வெண்பனி நிற மல்லிப்பூவின் வாசம் (என்னையொத்த வயதானவர்களின்) நினைவில் வீசுவதை தவிர்க்க இயலாது!

அக்காலத்தில் பூந்தமல்லி டெர்மினஸில் பேருந்து புறப்படுவதை விசிலடித்து அறிவிக்க ஒரு நேரக் காப்பாளர் (Time Keeper) இருந்தார். ஆனால் ஓட்டுனரோ அவரது விசிலை கண்டு கொள்ளாமல், பேருந்தில் பயணிகள் ஓரளவு நிறைந்த பின்னர் தான் பேருந்தைத் துவக்குவது வழக்கம்! அப்பேருந்துகளின் நடத்துனர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தனர்! சிலர் உருண்டையாகவும், சிலர் 'தொள தொளா' சட்டை / கால்சராயுடனும், இன்னும் சிலர் அழகாக நறுக்கப்பட்ட பென்சில் மீசையுடனும் பார்க்க காமெடியாக இருப்பர் :) அவர்களில் என்னைக் கவர்ந்தவர், வெண்மையான முகத்தில் இங்க் அடித்தது போல தெரியும் ஹிட்லர் மீசையுடன் காணப்பட்ட பழனி என்பவர்.

பெரும்பாலான பயணிகளுடன் பழனிக்கு நல்ல பழக்கம் இருந்ததால், அவர்கள் பட்டணம் செல்வது குறித்து ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதை பழனி வழக்கமாகக் கொண்டிருந்தார். மவுண்ட் ரோடில் இருந்த ஹிக்கின்ஸ்பாதம் புத்தகக் கடைக்கு என்னுடன் பயணித்த எனது தந்தையாருக்கு, பழனியிடமிருந்து டிக்கெட் பெறுவதில் துளியும் தயக்கம் இருந்ததில்லை. காரணம்: நடத்துனர்களில் பழனி ஒருவர் தான் டிக்கெடைக் கிழிக்க விரலை எச்சில்படுத்துவதில்லை:)

செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு அருகில் இருந்த பட் ரோடு நிறுத்தம் வந்தவுடன், நான் எனது கண்களையும், காதுகளையும் கூராக்கிக் கொள்வேன்! அக்காலத்தில், அவ்விடம் ஒரு குட்டி லண்டன் போல இருந்தது. வட்டமான தொப்பி அணிந்த ஆங்கிலேயக் கனவான்களுடன், கால்கள் தெரியும் விதத்தில் வண்ண வண்ண ஸ்கர்ட் அணிந்த வெள்ளை நிற பெண்மணிகள், அந்த நிறுத்ததிதில் தான் பேருந்தில் ஏறுவர்!

அந்த வெள்ளைக்கார ஜோடிகள் கை கோர்த்தபடி இருப்பர். இந்த கை கோர்த்தல், பொது இடத்தில் செய்யத்தகாத காரியமாக கல்யாணமான இந்தியர்கள் நினைத்த காலம் அது ! சில கனவான்களிடம் பீர் வாசனை அடிக்கும். வெள்ளைக்கார நங்கைகளோ வாசனை திரவிய தொழிற்சாலை போல கமகமவென்று வருவார்கள் !

பட்டணத்திலிருந்து பூந்தமல்லியை நோக்கி ஒரு இரவுப் பயணத்தின்போது, பார்க்க குளிரில் நடுங்கும் எலி போல காணப்பட்ட முனிசிபல் நீதிமன்ற பத்திர வியாபாரி என்னருகில் அமர்ந்திருந்தார். பேருந்து ஓடத் துவங்கியவுடன், அவரது தலை பக்கத்தில் இருப்பவர் தோளில் சாய்ந்து விடுவது என்பது பொதுவாக நடக்கும் விஷயம் தான், குறட்டையும் உண்டு :)

அக்கால பேருந்துகளில், இருவர் அமரக்கூடிய இருக்கைக்கு நேர் எதிரே இன்னும் இருவர் அமரும் விதமாக, இருக்கை அமைப்பு இருந்தது. எங்கள் இருக்கைக்கு எதிரே, கோட் சூட் அணிந்த ஓர் ஆங்கிலக் கனவானும், நீண்ட கால்கள் கொண்ட சிற்பம் போல இருந்த அவரது மனைவியும் அமர்ந்திருந்தனர். சாலையில் ஒரு மூதாட்டி முக்தி அடைவதை தடுக்கும் பொருட்டு, பேருந்து ஓட்டுனர் ஓர் அவசர பிரேக் அடித்ததில், என்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பத்திர வியாபாரி, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல, அவ்வெள்ளைக்கார பெண்மணியின் தாராள மடியில் தஞ்சம் அடைந்தார் :)

நிலைமையை உணர்ந்த வியாபாரி, 'சாரி மேடம், சாரி மேடம்' என்பதை, ஏதோ ஒரு பிராயசித்த மந்திரத்தை ஜெபிப்பது போல் பல தடவை உச்சரித்தார்! "முதலில் எழுந்திரு மேன், அப்புறம் மன்னிப்பு கேளு" என்று கூறியபடி, அந்த ஆங்கிலேயப் பெண்மணி தனது மடியிலிருந்த வியாபாரியின் தலையை, ஒரு வீங்கிய பெருச்சாளியை அப்புறப்படுத்துவது போல, தனது இடது கையால் விலக்கித் தள்ளினார் ! பிறகு அப்பெண்மணி தனது ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டபோது, பழனி சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னைப் பார்த்து கண்ணடித்தார் :)

ஒரு மழைக்கால இரவில் கடைசிப்பேருந்தில் நானும் என் தந்தையாரும் பட்டணத்திலிருந்து பூந்தமல்லியில் உள்ள எங்கள் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். தந்தையார் தூங்கி விட்டிருந்தார். 'பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டை அடைவதற்குள் ஹிக்கின்பாதம்ஸ் கடையில் வாங்கிய புத்தகங்கள் அத்தனையும் மழையில் நனைந்து விடுமே, என்ன செய்வது?' என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து மெல்ல நின்றது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது! எனது தந்தையாரை எழுப்பிய பழனி, நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதைத் தெரிவித்தார்.

சாலையில் என் பாதம் பட்டவுடன் தான் கவனித்தேன், எங்கள் வீட்டு வாசலிலேயே நாங்கள் இறக்கி விடப்பட்ட விஷயத்தை !!!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

Monday, July 14, 2008

448. ரங்கராஜன் நம்பி - My 2 cents!

எனது முந்தைய பதிவில் அம்முவின் விமர்சனத்தின் தொடர்ச்சியாக, எனது சின்ன மகளிடம் (6 வயது), 'படம் பிடித்ததா?' என்று கேட்டேன். அவள், "படத்தில 2 கமல் தானே ... சயிண்டிஸ்ட் கமல், கோயில்ல சண்டை போடற கமல் .. வராங்க, மீதி கமல் எல்லாம் எங்கே போனாங்க?" என்று ஒரு சூப்பர் கேள்வி கேட்டாள் :) நான் மற்ற 8 வேடங்களில் கமல் வருவது பற்றி விவரித்தபோது, "மத்த கமல் எல்லாம் பார்க்க ஏம்பா கார்ட்டூன் மாதிரி இருக்காங்க?" என்று இன்னொரு கேள்வி கேட்கவே, நான் அப்பீட் :)

My 2 cents: இணையத்தில் பலவகையான விமர்சனங்களை வாசித்து விட்டதால், உலகத்தரமான படத்தை எல்லாம் எதிர்பார்த்துச் செல்லவில்லை என்ற டிஸ்கியோடு தொடங்குகிறேன்! தசா ஒரு நல்ல மசாலா படம் என்று நிச்சயம் கூறமுடியும். Real Good Entertainer ! "சிவாஜி" பெட்டரா, "தசா" பெட்டரா என்று (ரஜினி ரசிகனான) என்னிடம் கேட்டால், என் பதில் ... No comments;) இதே படம், ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆங்கிலப் படமாக இருந்திருந்தால், அதன் concept மற்றும் 10 வேடங்களுக்கு சிலாகிக்கப்பட்டிருக்கும், நமது அடிமை மெண்டாலிட்டி அப்படிப்பட்டது :(

பிரம்மாண்டத்தை பிரம்மாண்டத்துடன் ஒப்பிட வேண்டும்! அந்த வகையில் சங்கரின் பல குப்பைகளை (சிவாஜி, இந்தியன் தவிர!) விட, தசா பரவாயில்லை என்று தான் கூறுவேன். இப்படி ஒப்பிடுவதை விடுத்து, சுப்ரமணியபுரத்துடனும், பருத்தி வீரனுடனும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறை கிடையாது! கமலின் சிறந்த நடிப்பைப் பார்க்க பலப்பல உத்தமமான படங்கள் (ராஜபார்வை, மூன்றாம் பிறை, நாயகன், ஹேராம், தேவர் மகன், குணா, குருதிப்புனல், மகாநதி, தெனாலி, அன்பே சிவம் ...) நமக்காக காத்திருக்கின்றன. மேலும், இந்தப் படத்திற்கு இவ்வளவு பணத்தைக் கொட்டியிருக்க வேண்டுமா போன்ற கேள்விகளுக்குள் செல்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தோன்றவில்லை!

கமலின் நடிப்பு, குறிப்பாக பல்ராம் மற்றும் வின்செண்ட் வேடங்களில் சூப்பர். வின்செண்ட் பாத்திரப் படைப்பில் ஒரு எழவு (நுண்)அரசியலும் இருப்பதாகத் தோன்றவில்லை! பத்து வேடங்களும் வித்தியாசமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, மேக்கப் சற்று அத்து மீறியதில், ஒரு வித 'ஒட்ட வைத்த' செயற்கைத்தனம் இருந்தது உண்மை தான் என்றாலும், பாத்திரத்திற்கு ஏற்ற பேச்சு வழக்கை அனுசரிப்பதில் கமலுக்கு இணை யாரும் கிடையாது. ஒன்றுமே இல்லாத புஷ் வேடத்தில் கூட , புஷ்ஷின் சின்னச்சின்ன மேனரிஸங்களை வெளிக் கொணர்ந்ததில், கமலின் நுண்ணிய கவனமும், உழைப்பும் தெரிகிறது.

ஒப்பனையும், தொழில்நுட்பமும் வளராத காலகட்டத்தில், தனது நடிப்பால் மட்டுமே 9 வேடங்களிலும் வித்தியாசம் காட்டிய 'நவராத்திரி' சிவாஜி, ஞாபகத்திற்கு வந்தது என்னவோ உண்மை தான்! அது போலவே, கமல் தானே பத்து வேடங்களிலும் நடிக்காமல், சிலவற்றை தாரை வார்த்துக் கொடுத்திருந்தால், இவ்வளவு கடுமையான விமர்சனங்கள் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

தசாவின் 12-ஆம் நூற்றாண்டுக் காட்சிகளின் பிரம்மாண்டம், ஆங்கிலப்படங்களுக்கு இணையானது. கமல் நாத்திகராக இருந்தாலும், தசாவின் பத்து வேடங்களில் ரங்கராஜன் நம்பி என்ற ஆத்திக வைணவர் வேடம் தான் அவருக்கு சிறப்பாகப் பொருந்துகிறது :) சாரு தனது விமர்சனத்தில், கோயிலில் இறைசேவை செய்யும் வைணவர் இப்படித்தான் புஜ பராக்கிரமத்துடன் இருந்திருப்பாரா என்று சந்தேகப்படுவது போல் படாமல் இருந்தால், அக்காட்சிகளை ரசிக்க முடியும்! பக்தி உணர்வு உள்ளவர்களுக்கு சிலிர்ப்பு தரும் காட்சிகள் அவை. கமல் "சாந்தாகாரம், புஜகசயனம் ..." என்று சொல்லும்போது எனக்கு மெய் சிலிர்த்தது!

வைணவத்தில், பரந்தாமனின் அடியாரைப் பணிவது, பரமனைப் பணிவதைக் காட்டிலும் உயர்ந்ததாகக் கூறப்படுகிறது! அந்த சிறிய விஷயத்தைக் கூட கவனத்தில் கொண்டு, ரங்கராஜ நம்பியை மூலவர் சிலையுடன் கட்டி கடலுக்கு இட்டுச் செல்லும்போது, பல்லாண்டு பாடும் வைணவர்கள், ஒருவர் தோள் மேல் ஒருவர் ஏறி, (மூலவரின் திருவடியைப் பற்றி வணங்காமல்!) ரங்கராஜன் நம்பியின் திருவடியைப் பற்றி வணங்குவதை காட்சியில் கொணர்ந்திருக்கும் செயல் வியப்பை வரவழைத்தது!

அதே சமயம், கேயாஸ் தியரி, பட்டர்ஃபிளை எஃபெக்ட் பற்றியெல்லாம சிந்திக்கக் கூட தமிழ் சினிமாவில் ஆள் இருக்கிறாரே என்று சாரு போலவெல்லாம என்னால் சிலாகிக்க முடியவில்லை;-)

தமிழ் கூறும் நல்லுலகில் உலவும் அறிவுஜீவிகள், கமர்ஷியலாக தோல்வி அடையும் படங்களை மட்டுமே "நல்ல" படங்கள் என்று ஒத்துக் கொள்வது, சிலாகித்துப் பேசுவதும் ஏன் என்று புரியவில்லை! கமர்ஷியலாக வெற்றி அடையும் திரைப்படங்களில் எந்த வகையிலும் நடிப்புக்கு scope-ஏ கிடையாது என்று மறுத்துப் பேசுவது சரியாகாது.

தசாவை தமிழ் சினிமாவின் மைல்கல் என்றெல்லாம் கூற மாட்டேன்! அதே நேரத்தில், தசா போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவுக்கு பின்னடைவு / ஆபத்து என்று நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு இணையாக கெட்டிக்காரத்தனமாக வாதாட எனக்கு சரக்கு போதாது :)

எ.அ.பாலா

447. "தசா" குறித்து அம்மு & பாலா

நேற்று காலை (மனைவியின் அலுவலகத்திலிருந்து பெற்ற ஓசி டிக்கெட்டு வாயிலாக!) குடும்ப சகிதம் தசாவதாரம் காணும் பெரும்பேறு கிட்டியது.  தசா குறித்து ரெவ்யூ எழுதி ஜோதியில் (பரங்கிமலை அல்ல:))கலக்காவிட்டால், நாமெல்லாம் என்ன "மூத்த" பதிவர் என்று தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. 
 
என் மகள் அம்மு, 'அப்பா, நான் விமர்சனம் எழுதினால் உங்க பிளாகிலே போடுவீங்களா?" என்று கேட்கவே, "ஆஹா, நீ ஒருத்தி தான் பாக்கி, எழுதிக் கொடு, போட்ருவோம்" என்றேன்.  அதே சமயம் (11 வயது) அம்மு எப்படி தமிழ் எழுதுகிறாள் என்று அறியும் ஆர்வமும் ஏற்பட்டது !!!  முதலில் அம்முவின் விமர்சனம், followed by mine.

அம்மு: தசாவதாரம் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் மாஸ்டர் பீஸ் ஆகும். கமலின் 10 அவதாரங்களில் தான் படமே இருக்கிறது.  எனக்குப் பிடித்தது விஷ்ணுவின் தாசனாக அவதாரமெடுக்கும் ரங்கராஜ நம்பி.  எந்தத் தவறும் செய்யாத அவரை கோவிந்தராஜரின் சிலையோடு கட்டிப் போட்டு சமுத்திரத்தில் போடுகின்றனர்.  இந்த முதல் அவதாரத்திற்குப் பிறகு, போகப் போக நமக்குக் குழப்பம் ஏற்படுகிறது!

அசினுக்கு (கமலுக்கு 10 அவதாரங்கள் இருக்கும்போது!) படத்தில் 2 அழகான அவதாரங்களே உள்ளன.  இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் கதாநாயகன் கோவிந்த் என்றாலும், பல்ராம் நாயுடு பாத்திரம் தான் பெஸ்ட்.   கமல், ஜார்ஜ் புஷ்ஷாகவும், ஜப்பான்காரராகவும், ஒரு 95 வயது பாட்டியாகவும் கூட ஜமாய்த்திருக்கிறார்.  நாயுடுவும், கலீபுல்லாவும், பாட்டியும் சிரிப்பு மூட்டுகின்றனர்.

எனக்கு இப்படத்தின் பாடல்கள் பிடித்திருந்தன.  படத்தின் வில்லனான ஃபிளெட்சரும், ஜப்பான்கார கமலும் சண்டை போடும் காட்சி பார்ப்பவர் உள்ளத்தை கவரும் வண்ணம் அமைந்திருந்தது.  பல விறுவிறுப்பான திடீர் திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ஆக வெற்றி பெறும் என்பது என் கருத்து.

அன்புடன்
அம்மு

பி.கு: எனது விமர்சனம் தனிப்பதிவாக, இன்று மாலை வெளிவரும்!

Friday, July 11, 2008

446. ஆணாதிக்க அமர்சிங்கும் அம்பானி அரசியலும்

அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து நடந்து வரும் மீடியா கலாட்டாவில், கீழே உள்ள செய்திக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படாதது எதிர்பார்த்தது தான் என்றாலும், இந்த திமிர் பிடித்த ஆணாதிக்க மனோபாவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

இரு தினங்களுக்கு முன், சமாஜ்வாதி கட்சியின் மூத்த, மூளை மழுங்கிய, வெட்கங்கெட்ட, காரியவாதி அரசியல்வியாதியான அமர்சிங் (அவரது கட்சியின் பெண்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டிற்கு தகுந்தாற் போல!) பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி, சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, சில பெண்ணிய இயக்கங்கள், அவரை கண்டித்ததோடு, அமர்சிங் பொதுவில் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன!

நாட்டின் மூத்த பெண் அரசியல்வாதியான சோனியாவை இழிவுபடுத்தும் வகையில் அமர்சிங்கின் பேச்சு அமைந்துள்ளதாக, அந்த பெண்ணிய இயக்கங்கள் வெளியுட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இத்தனை நாள் நாகரீகமற்ற வகையில் குடுமிபிடி சண்டை போட்டு வந்த காங்கிரசுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே சமீபத்தில் மலர்ந்துள்ள திடீர் நல்லுறவைப் பற்றி செய்தியாளர்கள் அமர் சிங்கிடம் கேட்டபோது, அவர் கடுப்பாகி, "பிரகாஷ் கரத் சோனியாவை சந்திக்கச் சென்றால், அதை திருமண இரவு என்கிறீகள் !? அதே நாங்கள் சோனியாவை சந்திக்கச் சென்றால், பலாத்காரம் என்று கூறுகிறீர்களே?" என்று திருவாய் மலர்ந்துள்ளார் !

இதை லூசுத்தனமான பேச்சு என்று விட்டுத் தள்ள முடியாது. அமர்சிங்கின் ஆணாதிக்க மனோபாவமே அருவருப்பான முறையில் வெளி வந்துள்ளது !

இது இப்படி இருக்க, நண்பர் அதியமான் கீழே எழுதியிருப்பதை (அம்பானி அரசியல் பற்றி) வாசியுங்கள்!

1991 வரை இந்தியாவில் நிலவிய லைசென்ஸ், கோட்டா, பெர்மிட் ராஜியத்தில் (அதிகாரிகள், அரசியல்வதிகள், தொழிலதிபர்கள் மூவரின் கூட்டு. அதன் மூலம் அதிகார துஷ்பிரோயகம் மற்றும் ஊழல் வளர உதவிய சோசியலுச பாணி பொருளாதாரம்) மிக அதிகம் வளர்ந்த ஒரு நிறுவனம் ரிலயன்ஸ். பல காங்கிரஸ் தலைவர்களை விலைக்கு வாங்கி அதன் மூலம் பல லைசென்சுகளை, இறக்குமதி அனுமதிகளை (அப்போது டாலருக்கு கடும் தட்டுப்பாடு, அதனால் அரசின் கட்டுபாடு மிக அதிகம்) பெற்று, போட்டியாளர்களுக்கு அவை கிடைக்காமல் செய்து வளர்ந்தது. (இது அன்று அனைத்து முதலாளிகளும் செய்தனர்/செய்ய வேண்டிய நிர்பந்தம் ; இன்று இல்லை).

தன் வினை தன்னை சுடும். பிரனாப் முகர்ஜியை பல ஆண்டுகளாக 'வளைத்து' போட்டிருந்தது ரிலையன்ஸ். பிறகு 90களுக்கு பின், முலயம் சிங்-இன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த (இளைய) அனில் அம்பானி, எம்.பி ஆகுவும் ஆனார். 2004 பொது தேர்தலில் முலயாம் சிங் யாதவ் பெரும் வெற்றி பெறுவார், பிரதமர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என்று தப்பு கணாக்கு போட்டார் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு அனில் அரசியலில் நேரடியாக இறங்கியது பிடிக்கவில்லை. மேலும் தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதில் கருத்து வேறுபாடுகள். கருப்பு பணம் பல ஆயிரம் கோடிகள் இருவரிடமும். ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் அளவில், பினாமி கம்பெனி பெயர்களில், முகேஷிடம் உள்ளது.

2006இல் சகோதரர்கள் சண்டையிட்டு பிரிந்தனர். அனில், ரிலயன்ஸ் டெலிகாம் மற்றும் ரிலயன்ஸ் காப்பிடல் மற்றும் ஒரு எனர்ஜி / கட்டுமான நிறுவனத்தையும் வைத்துகொண்டார். முகேஸின் கட்டுப்பாட்டில் ரிலயன்ஸ்நிறுவனம், இருவருக்குள்ளும் இன்னும் கடும் விரோதம் ; திரை மறைவு நாடகங்கள்..

சமாஜ்வாடி கட்சி இன்று அனில் அம்பானியின் பக்கம் பலமான ஆதரவாக உள்ளது. (பல நூறு கோடிகள் கொடுத்திருப்பார் !!). காங்கிரஸ் அமைச்சரவையில் உள்ள பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா முகேஸின் ஆள். அதனால் தான் 'ரிலயன்ஸ் பெட்ரோலிய நிறுவனம் ஏற்றுமதி செய்து ஈட்டிய 35% லாபம்மிக மிக அதிகம். அதற்கு உச்ச கட்ட வரி (windfall tax) விதிக்க வேண்டும்' என்று சமாஜ்வாடி கட்சி சில காலமாக கூச்சல் போடுகிறது.

இடது சாரிகள் ஆதரவு வாபஸ் ஆனவுடன், காங்கிரஸ் அரசுக்கு இன்று சமாஜ்வாடி கட்சியின் முழு ஆதரவு தேவையாகிவிட்டது. இனி அனில் அம்பானியின் கை ஓங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை பதவி நீக்கம் செய்ய அவர்கள் பிரதமரை நிர்பந்திப்பார்கள். முலயாம் சிங்கின் வலது கரமான அமர்சிங் ஒரு அதிகார தரகர். பிம்ப் வேலை கூட செய்வார் என்று கேள்வி. அபாயகரமான ஒரு அரசியல்வாதி.

இனி தான் இருக்கிறது நாடகம்!

தன் வினை தன்னைச் சுடும். ரிலயன்ஸ் எந்த வகையில் அரசியல்வாதிகளை வாங்கி வளர்ந்ததோ அதே வழியில் விழ வாய்ப்பு ஏற்படும் சூழல். ஆனால் அது நாட்டிற்க்கு நல்லதல்ல. ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் சுத்தீகரிப்பு ஆலை உலகின் மிகச் சிறந்த ஆலைகளிள் ஒன்று. மிக குறைந்த நாட்களில், குறைந்த செலவில் கட்டப்பட்டது. மிக மிக நவீனமானது. அதனால் தான் லாபம் அதிகம்.

அது நம் தேசிய சொத்து! இதைப் புரிந்து கொள்வது கடினம்...

மேலும் பார்க்க :

http://indianeconomy.org/2008/07/08/guest-post-mukesh-ambani-under-fire/

Monday, July 07, 2008

FCI வீணாக்கிய 10 லட்சம் டன் உணவு தானியம்!

கடந்த 10 ஆண்டுகளில் நமது FCI (Food Corporation of India) கோடவுன்களில், (ஒரு கோடி ஏழை மக்களின் பசிப்பிணியை ஓராண்டு காலம் போக்க வல்ல) பல நூறு கோடிகள் மதிப்புள்ள 10 லட்சம் டன் உணவு தானியங்கள் உபயோகத்திற்கு லாயக்கிலாமல் போயிருக்கின்றன என்ற திடுக்கிடும் செய்தி, இந்தியக்குடிமகன் ஒருவர் 'தகவல் அறியும் உரிமை'யின் (RTI) பேரில் செய்த விண்ணப்பம் மூலம் தெரிய வந்துள்ளது !!!

இத்தனைக்கும், FCI நிறுவனம் தானிய சேமிப்பு பராமரிப்புக்காக ரூ.242 கோடி செலவு செய்த பின்னரும் இது நிகழ்ந்துள்ளது. அடுத்து, கெட்டுப் போன தானியங்களை கோடவுன்களிலிருந்து வெளியேற்ற இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை!

பல நூறு கோடி பெறுமானமுள்ள தானியங்கள் வீணாக்கப்பட்டிருப்பதை (தானியங்கள் வாங்குவதற்கும், சேமிப்பதற்கும், மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்கும் பொறுப்பேற்று இருக்கும்) FCI நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. UNO (United Nations Organization) அறிக்கை ஒன்று, இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 63 சதவிகிதத்தினர் இரவு உணவு கிடைக்காமல் தூங்கச் செல்கின்றனர் என்ற அவலத்தை பறைசாற்றுவதை, இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது :(

இது ஒரு தேசிய அவமானமில்லையா ?????

இது போல பலப்பல பிரச்சினைகள் இருக்க, நமது பிரதமர் (அமெரிக்காவின் அடி வருடி) அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற துடியாய் துடிப்பது வேதனை !

எ.அ.பாலா

நன்றி: Financial Express

Monday, June 30, 2008

444. அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகள், பிரதமர், ஒபாமா ...

பத்து நாட்களுக்கு முன் நமது பிரதமர் மன்மோகன், அமெரிக்காவுடனான ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால் தான் ராஜினாமா செய்து விடப் போவதாக (சோனியாவுடன் ஒரு நாடகம் நடத்தியதாக) செய்தி அடிபட்டது.  நியாயமாக, விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறி, ஏழை எளிய மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கும் பிரதமரும், நிதி அமைச்சரும் ஏற்கனவே பதவி விலகி இருக்க வேண்டியவர்கள்.  அந்தக் காரணம் பொருத்தமானதாகவும் இருந்திருக்கும் !  நாளுக்கு நாள் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கும் Inflation Index பற்றி துளியும் கவலையின்றி,  கவைக்குதவாத அணுஆயுத ஒப்பந்தம் ஒன்றைப் பற்றியே சதா சர்வ காலமும் சிந்தித்துக்  கொண்டிருக்கும் நமது பிரதமரைப் பார்த்தால், ஒரே சமயத்தில் வருத்தமாகவும் / காமெடியாகவும் உள்ளது !!!

ஆகஸ்ட் 2006 திட்டக் கமிஷன் அறிக்கை ஒன்று, 2031-32 வரை இந்தியாவின் ஆண்டொன்றுக்கான 8 சதவிகித GDP தொடர் வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதும் 11 வகை எரிபொருள் கலப்புகள் (Fuel Mix) தரவல்ல சாதக/பாதகங்கள் குறித்துப் பேசும்போது, இன்றிலிருந்து 2031-32 வரை இந்தியாவின் அணுசக்தித் திறன் 20 மடங்காக உயர்ந்தாலும் நாட்டின் மொத்தத் தேவையில் அணுசக்தியின் பங்கு 4-6.4% மட்டுமே என்று தெளிவாக குறிப்பிடுகிறது. அதாவது, அணுசக்தி எக்காலத்திலும் நம் நாட்டின் எனர்ஜி தேவைகளுக்கு தீர்வாகாது என்பது நிதர்சனமான உண்மை.

123 ஒப்பந்தம் தொடர்பான எனது பழைய பதிவு இங்கே, வாசித்து விட்டுத் தொடரவும்.
http://balaji_ammu.blogspot.com/2007/12/star4.html

இதில் நமது டிவி மீடியா அடிக்கும் கூத்தைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது!  இந்த ஒப்பந்தம் குறித்த சாதக/பாதகங்கள் சரியாக எடுத்துக் கூறுவதில்லை.  மீடியாவின் அமெரிக்க ஜால்ரா காதைக் கிழிக்கிறது. இவ்விஷயத்தில் இடது சாரிகள் எடுத்துள்ள நிலைப்பாடு சரியானது என்பது தான் என் கருத்து. மேலும், இதுவரை நடந்துள்ள காங்கிரஸ்-இடதுசாரி ஆலோசனைக் கூட்டங்களில், காங்கிரஸ் இந்த ஒப்பந்தம் குறித்த முழு விவரங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருந்திருப்பது, மிகுந்த சந்தேகங்களை எழுப்புகிறது. 

இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதற்காக, இடதுசாரியை கழட்டி விடத் துணிந்துள்ள ஆளும் கட்சி, சமாஜ்வாடி கட்சியின் காலில் விழத் தயாராக இருப்பது, உச்சபட்ச காமெடி :)  சாகக் கிடக்கும் அமெரிக்க அணுஆயுதத் தொழில் புத்துணர்ச்சி பெற்று (அதாவது, இந்தியா அங்கிருந்து தொழில் நுட்பத்தையும், யுரேனியத்தையும் இறக்குமதி செய்வதின் வாயிலாக!) மீண்டும் வளர்வதற்கு இந்தியா எதற்கு உதவ வேண்டும் என்பது ஒரு முக்கியக் கேள்வி! 

அடுத்து, தலைப்பில் "ஒபாமா"வும் வருவதால், அவர் மேட்டர் பற்றியும் எழுதணும் !  அதை
தனிப்பதிவாக இடுகிறேன், ஓக்கேவா ?

எ.அ.பாலா

Tuesday, June 24, 2008

443. இது தான்டா இந்தியத்தாத்தா !

இது நடந்தது ஜூன் 2002-இல்!

அமெரிக்க அதிபர் புஷ் ISI நிறுவனத்தில் பணி புரிந்த ஒருவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்தார் என்று கேள்விப்பட்டால், நாம் கொதித்துப் போக வேண்டியதில்லை ! நான் இங்கு குறிப்பிடும் ISI, பாகிஸ்தானின் Inter Services Intelligence என்கிற உளவுத்துறை நிறுவனம் அல்ல, நம் நாட்டின் பாரம்பரியமிக்க, கொல்கத்தாவிலுள்ள Indian Statistical Institute என்கிற அரசு நிறுவனம் :)

கௌரவிக்கப்பட்டவர் கலியம்புடி ராவ் என்கிற இந்திய புள்ளிவிவரயியல் (Statistics) மேதை! அவரது பெயரால் வழங்கப்படும் பல கோட்பாடுகளை (Rao Distance, Rao's Score Test, Cramer-Rao Inequality, Rao-Blackwellization, and Fisher-Rao Theorem) கண்டுபிடித்து, புள்ளிவிவரயியல் துறைக்கே பெருமை சேர்த்த வித்தகர் இவர்!

புஷ் வழங்கிய, ஜனாதிபதியின் அறிவியலுக்கான தேசியப் பதக்கத்தை இவருக்கு முன்னால் வாங்கியுள்ள, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நால்வர் - இயற்பியலுக்கு நோபல் பரிசு பெற்ற சந்திரசேகர், மரபியல் மேதை ஹர்கோபிந்த் குரானா, பெல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் குமார் படேல் மற்றும் அருண் நேத்ரவல்லி ஆகியோர். மேற்கூறிய நால்வரும் தங்களது இளவயதிலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தவர்கள். ஆனால், கலியம்புடி ராவ் ISI இயக்குனர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது 60-வது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார், அவரது மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்த காரணத்தால். பொதுவாக, இந்த வயதில் இந்திய தாத்தா/பாட்டிகள் அமெரிக்காவில் வளரும் தங்களது பேரக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு வேண்டி அங்கு செல்வது வழக்கம் :)

ஆனால், நமது சூப்பர் தாத்தாவோ, தனது 62-வது வயதில் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்து, 70வது வயதில், பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரயியல் துறைத்தலைவராக உயர்ந்து, 75வது வயதில் அமெரிக்க குடிமகனா(ரா)கி, தனது 82வது வயதில், அமெரிக்கா ஜனாதிபதியின் அறிவியல் பதக்கத்தை வென்று பெருமை பெற்றவர்.

ராவ், "பணி ஓய்வு பெற்றபின் இந்தியாவில் நம்மை யாரும் மதிப்பதில்லை. உடன் பணி புரிபவர் கூட உங்கள் பதவிக்கு மரியாதை தருகிறார்களே அன்றி உங்கள் உழைப்பையும், மேதமையையும் மதிப்பதில்லை" என்று கூறுவதை வைத்து அவரது இந்திய அனுபவம் கசப்பானது என்று சொல்லி விட இயலாது. ஏனெனில், இவர் இந்திய அரசின் பத்மவிபூஷன் விருதை பெற்றவரும் கூட!

அவர் பணி புரியும் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகக் குறிப்பொன்று "நவீன புள்ளிவிவரயியலின் ஒரு முக்கிய முன்னோடியாகவும்,உலகின் தலை சிறந்த 5 புள்ளிவிவரயியலாளர்களில் ஒருவராகவும் ராவ் உலக அரங்கில் அறியப்பட்டுள்ளார்" என்று புகழாரம் சூட்டுகிறது. அவரது ஆராய்ச்சி, பொருளாதாரம், வானிலை, மருத்துவம், ஏரோனாடிக்ஸ் என்று பல துறைகளின் மேம்பாட்டுக்கு உதவியிருக்கிறது.

ராவ் இவ்விருதை புள்ளிவிவரயியலில் இந்தியாவின் சிறப்பு மிக்க பாரம்பரியத்திற்கு கிடைத்த மரியாதையாகவே பார்க்கிறார். ராவ் குறிப்பிடும் பாரம்பரியத்தின் அடித்தளத்தை அமைத்தவர், P C மஹாலனோபிஸ், இவர் தான் ISI நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். உலகின் புள்ளிவிவரயியலாளர்களில் பெரும்பான்மையினர் இந்தியர்கள் என்பது கூடுதல் விவரம்!

எ.அ.பாலா

Monday, June 23, 2008

பொன்மொழிகள் 12

நீ இவ்வுலகில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாது என்று இருவகைப்பட்ட மனிதர்கள் கூறுவர்:
அவர்களில் ஒரு வகையினர் தாங்கள் முயற்சி எடுக்க அஞ்சுபவர்கள், மற்றொரு வகையினர் உனது
வெற்றியை நினைத்து அஞ்சுபவர்கள்.

ரே கோஃபோர்த்

ஒருவன் இவ்வுலகிலிருந்து எவ்வளவு எடுத்துக் கொண்டானோ, அதற்கு ஈடானதையாவது இவ்வுலகிற்கு திருப்பித் தர வேண்டிய கடமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

நோக்கு(Attitude) என்ற சிறிய விஷயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பெறுவதை வைத்து நாம் வாழ்கிறோம். கொடுப்பதை வைத்து ஒருவரின் வாழ்வை நிர்ணயிக்கிறோம்.

எல்லா உன்னதமான விஷயங்களும் எளிமையானவை, ஒரு வார்த்தையில் சொல்லக்கூடியவை: விடுதலை, நேர்மை, நியாயம், கடமை, கருணை, நம்பிக்கை ...

வின்ஸ்டன் சர்ச்சில்

நீ இவ்வுலகில் பார்க்க விரும்பும் மாற்றம் நீயாக இருத்தல் வேண்டும்!

உன்னுடைய நம்பிக்கைகள் எண்ணங்களாகின்றன. உன்னுடைய எண்ணங்கள் வார்த்தைகளாகின்றன. வார்த்தைகள் செயல்கள் ஆகின்றன. செயல்கள் வழக்கங்கள் ஆகின்றன. வழக்கங்கள் மதிப்பீடுகள் ஆகின்றன. மதிப்பீடுகள் உனது விதியை நிர்ணயிக்கின்றன.

மனதளவில் வன்முறை இருக்கும்போது, வன்முறையாளனாக இருப்பது என்பது, பேடித்தனத்தை அகிம்சை என்ற போர்வையால் மூடி மறைப்பதை விட சிறந்தது!

மகாத்மா காந்தி

எது சரி எது தவறு என்பதை ஒருவர் சுயமாக முடிவு செய்ய வேண்டும். அது போலவே, எது நாட்டுப்பற்று, எது இல்லை என்பதையும் தான்.  உன்னுடைய ஆழமான நம்பிக்கைக்கு எதிராக முடிவெடுப்பது என்பது, உனது சுயத்திற்கும் உன் நாட்டுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும், பிறர் உன் மேல் எவ்வித முத்திரையை குத்தினாலும் கூட!

மார்க் ட்வைன்

நான் ஏதன்ஸ் நகரவாசியும் அல்லன், கிரேக்கனும் அல்லன், நான் இவ்வுலகத்தின் குடிமகன்!

சாக்ரடீஸ்

எந்தவொரு கணத்தில், மனித உரு என்ற கோயிலில் கடவுள் அமர்ந்திருப்பதை உணர்கிறேனோ
எந்தவொரு கணத்தில், ஒவ்வொரு மனிதனுள்ளும் கடவுளைக் காண முடிகிறதோ
அந்தவொரு கணத்தில், எனது பற்றுக்கள் அனைத்தையும் துறந்து நான் விடுதலை பெறுகிறேன்!

மதம் என்பது, மனிதன் உள்ளிருக்கும் இறைத்தன்மையின் வெளிப்பாடே !

சுவாமி விவேகானந்தர்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails